காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ரணில் கூறும் தீர்வு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் ஊடாக செயற்படுவார் என யாழ்ப்பாணம் (jaffna) நாவாந்துறையில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று 15 வருடங்கள் கடந்தோடி விட்டது. இதில் இறுதிப்போரில் தமது பிள்ளைகளை, கணவன்மாரை, உறவுகளை சீருடை தரப்பிடம் தமது கண்முன்னே கையளித்தவர்கள் அவர்களுக்கு இன்றுவரை நடந்தது தெரியாமல் அங்கலாய்க்கின்றனர்.
அவர்கள் கேட்பதெல்லாம் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைதான்.இதைக்கேட்டுத்தான் அவர்கள் வருடக் கணக்காக வீதியில் கிடக்கிறார்கள்.
இந்த 15 வருட காலத்தில் ஐந்து வருடம் நல்லாட்சி அரசு என்ற போர்வையில் ரணில் பிரதமர். தற்போது ஜனாதிபதி.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission, LLRC) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவால் 2010ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட ஓர் உண்மையறியும் விசாரணை ஆணையமாகும். இந்த ஆணைக்குழுவால் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
அதேபோன்று ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கூட எதனையும் செய்ய முடியவில்லை.
இப்போது மீண்டும் முதலிடத்தில் இருந்து தொடங்குவதாக அறிவித்துள்ளார் ரணில்.அதுவும் யாழ்ப்பாணத்தில்.
தமக்கு வாக்கு வேண்டுமென்பதற்காக தமிழர்களை தொடர்ந்தும் இழிச்சவாயர்களாக அவர்களின் துயரத்தில் இருந்து அதிகாரத்தை கை்கப்பற்ற துடிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் இவ்வாறான வாக்குறுதிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.இதற்கு ஆமாம் சாமி போடும் எம்மினத்தவர்களும் அவர்களுடன் இருக்கும் வரை...
தொடர்ந்தும் கண்ணீரில் தொலையும் தமிழரின் வாழ்வு...