அமெரிக்க தூதுவரையே வாயடைக்க வைத்த ரணில்
அமெரிக்க தூதுவரை வாயடைக்க வைத்த ரணில்
அதிபர் செயலகத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற படையினர் செயற்பட்ட விதம் குறித்து தனது கவலையை தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கிற்கு, அமெரிக்காவின் வரலாற்றை சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துக் கூறி வாயடைக்கச் செய்துள்ளார்..
இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலரை சந்தித்து; அதிபர் செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியது தொடர்பில் விளக்கமளித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அதிபர் செயலகத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற பாதுகாப்புப் படையினர் செயற்பட்ட விதம் குறித்து கவலையடைவதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த அதிபர் ரணில்,‘அமெரிக்க கெபிடல்’ கட்டடத்தை போராட்டக்காரர்களிடம் இருந்து விடுவிக்க அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் அமெரிக்க சட்டத்தின்படி இவ்வாறுதான் செயற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டடம்
அத்துடன் அதிபர் செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டடம் எனவும் அங்கே தான் அரசின் பல முக்கிய ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் அடங்கலாக இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
