ரணிலின் புதிய ஆட்சி! சர்வதேசத்தில் இருந்து கடும் இறுக்கம்
சட்ட விரோதமான படைப் பிரயோகம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான படைப் பிரயோகத்தையும் உடனடியாக நிறுத்துமாறும் பாதுகாப்புப் படையினருக்கு உடனடியாக உத்தரவிடுமாறும் சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் இலங்கையின் புதிய அதிபரை வலியுறுத்தியுள்ளன.
அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு நாள் கடந்திருந்த நிலையில், அதிபர் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் தடியடி தாக்குதல் நடத்தியிருந்துடன், சட்டத்தரணி உள்ளிட்ட பலரை கைதுசெய்திருந்தனர்.
இலங்கை மக்களுக்கு ஆபத்தான செய்தி
இந்தச் சம்பவம் "புதிய அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை விட மிருகத்தனமான படைப்பலத்தின் மூலம் செயற்பட விரும்புகிறது என்ற ஆபத்தான செய்தியை இலங்கை மக்களுக்கு கொடுக்கிறது" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
அடிப்படை உரிமைகளை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்பதுடன், இலங்கையர்களின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் சர்வதேச பங்காளிகள் அதன் மக்களின் உரிமைகளை நசுக்கும் நிர்வாகத்தை ஆதரிக்க முடியாது என்ற செய்தியை உரத்த குரலில் அனுப்ப வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
