ரணிலின் பிரிட்டன் விஜயம் - வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு
பொய்யான தகவல்
பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கச் சென்ற அதிபர் ரணில் தலைமையிலான குழுவினர் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஊடகங்களும் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவதானிக்கப்படுவதாக அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் இறுதிக் கிரியையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க - அதிபரின் பிரத்தியேக செயலாளர் செண்ட்ரா பெரேரா மற்றும் அதிபரின் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோர் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டிருந்தனர். மேலும், அதிபரின் உத்தியோகபூர்வ வைத்தியரும் உடன் சென்றிருந்தார்.
தனிப்பட்ட பயணம்
முதற்பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க தனது தனிப்பட்ட செலவில் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டதுடன், காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தனவும் ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில், நேற்று (19) நடைபெற்ற புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் சர்வதேச நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச தலைவர்கள்
போலந்து அதிபர் ஆண்ட்ரிசெஜ் டுடா மற்றும் அவரது மனைவி அகதா கோர்ன்ஹவுசர்-டுடா, தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசா, கானா அதிபர் நனா அகுபோ-அட்டோ, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு, சீன பிரதி அதிபர் வங் கிஷான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,
அவுஸ்திரேலியப் பிரதமர் அன்டனி அல்பெனிஸ், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் உள்ளிட்டோரும் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூடியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.