நெருக்கடியில் இலங்கை! அடுத்தகட்ட நகர்வு பற்றி விளக்கிய ரணில்
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை எனவும், நாட்டின் கையிருப்பை அதிகரிக்க மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் தேவை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி மற்றும் சட்ட ஆலோசகர் நியமனம்
கூட்டு வர்த்தக சம்மேளனம், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் உள்ளிட்ட வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமரால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததன் பின்னர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுடனான உறவு முறிவு
நெருக்கடியைத் தணிக்க உதவும் எந்தவொரு நிதிப் பாலமும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கையில் தங்கியுள்ளது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்கொடை அளிக்கும் நாடுகளுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜப்பானுடனான முறிந்த உறவுகளை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் அவர்களின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
