மிரிஹானவில் இடம்பெற்றது இனவாத சம்பவமில்லை - ரணில் அறிக்கை!
நேற்றைய தினம் மிரிஹானவில் இடம்பெற்றது இனவாத சம்பவமில்லை, பயங்கரவாத சம்பவமில்லை, என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும் என அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு தீர்வு எதுவும் காணப்படாததால் நேற்றிரவு மிரிஹான பங்கிரிவத்தை ஆர்ப்பாட்டம் வெடித்தது. தற்போதைய அரசியல் கட்டமைப்பின் வீழ்ச்சியே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கலாம்.
இலங்கை பிரஜைகளை வாட்டும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. எதிர்க்கட்சியும் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளது.
அரசாங்கம் இந்த சம்பவங்களிற்கு பல தரப்பட்ட குழுக்கள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது, ஆனால் அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்.
அரசாங்கம் இனவாத கருத்துக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும், அதேவேளை யார் இந்த வன்முறைகளிற்கு காரணம் என்பதை வெளிப்படுத்தவேண்டும்.
யூப்பிளி போஸ்டில் அமைதியான விதத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன ஆனால் பங்கிரிமாவத்தையில் அந்த நிலை மாற்றமடைந்தது. நான் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றேன்.
அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக எவரையும் காயப்படுத்தக்கூடாது. மக்களிற்கு அமைதியாகவும் சுதந்திரமாகவும் போராட உரிமையுண்டு, பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்கெடுக்கக் கூடாது.
ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதற்கான உரிமையுண்டு. தாமதமாகிவிட்டபோதிலும் நாடாளுமன்றத்திற்கும் கடப்பாடு உள்ளது.
பொதுமக்களிற்கு தீர்வை வழங்கக் கூடிய தீர்வுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்,
இந்த நெருக்கடிக்கு வன்முறைகள் இன்றி தீர்வு காணப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.