வீதித்தடையை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றுக்குள் செல்ல முயற்சி
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்குக்கு தொடர்பில் நீதிமன்றுக்கு முன் குவிந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிய எதிர்ப்பு கோசங்களை எழுப்பி வருகின்றமையினால் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழுவினரும் கலந்துக்கொண்டு தமது எதிர்பை வெளியிட்டு வருகின்றனர்.
இதன்போது, “அநுர கோ ஹோம்” என்ற கூச்சல்களோடு ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பெலவத்த ஜேவிபியின் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது போத்தலைக் கொண்டு கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, காவல்துறையினர் அதிகாரி ஒருவரின் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது.
இரண்டாம் இணைப்பு
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை கோரி எதிர்க்கட்சிகள் ஒன்றாக திறளவுள்ளதாக அறிவித்துள்ள பின்னிணில் ஆதரவாளர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
அத்தோடு, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கபட்டுள்ளன.
கடுமையான சோதனை
குறித்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக, அவரை இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

