ரணிலின் பேச்சுக்கான அழைப்பு ஒரு அரசியல் நாடகம் - யோதிலிங்கம்
இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் நோக்கில் தமிழ் தரப்புக்களை நாளையதினம் பேச்சுக்கு வருமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைத்திருப்பது ஒரு அரசியல் நாடகமேயன்றி வேறு ஒன்றுமில்லையென அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் யாழில் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனை
சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவே தமிழர் தரப்பை அதிபர் ரணில் பேச்சுக்கு அழைத்துள்ளார். குறிப்பாக இலங்கைக்கு உதவ வேண்டுமெனில் சர்வதேச நாணயநிதியம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது.அதில் ஒன்று இலங்கையில் அரசியல் ஸ்திரப்பாட்டை ஏற்படுத்துதல், இரண்டாவது,இராணுவத்தின் எண்ணிக்கையை குறைத்தல், மூன்றாவது,புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டை உள்வாங்க வேண்டும். இந்த மூன்று செயற்பாட்டையும் உள்வாங்க வேண்டுமெனில் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும் அல்லது தீர்வை காண்பதற்கான தோற்றப்பாட்டை வெளியே காட்டிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் இன்று அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் அறிவிப்பு
இதனைவிடவும் மேற்குலக நாடுகள் தாம் வழங்கும் உதவியை இனப்பிரச்சினை தீர்வோடு தொடர்புபடுத்தியுள்ளன.அதாவது இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டாலே தாம் உதவிகளை தொடர்ந்து வழங்க முடியுமென அந்த நாடுகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறி இருக்கிறது இந்தியா.
இவ்வாறான நிர்ப்பந்தத்தினாலேயே அதிபர், இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைத்து கட்சிகளையும் பேச்சுக்கு அழைத்துள்ளார். உண்மையில் தீர்வை காணவேண்டுமென அவர் விரும்பினால் தமிழ் தேசிய தரப்பிற்கும் அரசுக்கும் இடையிலானதாகவே பேச்சு இருந்திருக்கவேண்டும்.மாறாக இது அனைத்து கட்சிகளையும் அழைத்திருப்பது சர்வகட்சி மாநாடு ஒன்று கூடல் போலவே உள்ளது.
எனவே அதிபரின் இந்த பேச்சுக்கான அழைப்பு என்பது ஒரு நாடகமே அன்றி வேறில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
