ரஞ்சன் விடுதலைக்காக சர்வதேசத்திடம் செல்வோம்! சஜித் பிரேமதாச சூளுரை
தற்போதைய சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாட வேண்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இதற்கு ஹரின் பெர்னாண்டோ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு தலையீடு செய்யும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்றைய தினம் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்கள் சார் மனிதாபிமானியான ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, அவர் தற்போது சிறைப்படுத்தப்பட்டிருப்பது நமக்கும் நாட்டுக்கும் இழப்பாகவே பார்க்கிறேன்.
தற்போதைய நிலையில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டிருந்தால், இந்நாட்டில் துன்பப்படும் மக்களுக்கு உதவுவதில் அவர் முக்கிய பங்காற்றியிருப்பார். ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் வழங்குமாறு அரச தலைவரிடம் நான் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன்.
நேற்றும் இன்றும் அந்த கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் அவருக்கு இன்னும் அந்த விடுதலை வழங்கப்படவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் வழங்குமாறு மனிதாபிமானத்தின், கருனையின் பெயரால் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண விடுதலையை இந்த நாட்டில் வென்றெடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும். வேறு எந்த வெளிதரப்பின் தலையீட்டின் மூலமாகவும் வெற்றி கொள்ளும் விருப்பம் எங்களுக்கு இல்லை.
ஆனால் உள்நாட்டில் அந்த வெற்றியை எங்களால் அடைய முடியாவிட்டால், இந்த மனிதாபிமானமிக்கவரின் சுதந்திரத்திற்காக, சாத்தியமான அனைத்து நியாயமான ஜனநாயக செயல்முறைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என கூறுகிறேன்.
ஆனால் அந்தச் செயற்பாட்டில் எமது நாடு, எமது இறைமை, தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை மீறுவதற்கு நாம் எந்த வகையிலும் தயாராக இல்லை.
அதற்குக் காரணம் நாங்கள் உண்மையான தேசபற்றாளர்கள். நாட்டை உண்மையாக நேசிக்கும் இந்த தாய்நாட்டின் பொது சேவையாளர்கள் நாங்கள். எனவே, ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண விடுதலையை வெல்வதே எமது ஒரே நோக்கமாகும்.
அதற்காக, சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எம்மால் இயன்ற மிக உயர்ந்த பங்களிப்பை செய்ய உறுதி பூண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
