ஏன் இப்படிச் செய்தார்? சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் முஜிபுர் வெளியிட்ட தகவல்
ரஞ்சன் ராமநாயக்க ஊழலில் ஈடுபட்டு, மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தியமைக்காக சிறையில் தண்டனை அனுபவிக்கவில்லை எனவும் அரசியல் கைதியாகவே சிறையில் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரச தலைவர் ஏன் பொது மன்னிப்பை வழங்காமல் இருக்கின்றார் என்ற கேள்வி எழுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் நலன் அறியும் நோக்கில் இன்றைய தினம் வெலிகடை சிறைச்சாலைக்கு சென்று வந்த நிலையில், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஞ்சன் ராமநாயக்க நேற்று விடுதலை செய்யப்படுவார் என சமூக ஊடகங்களிலும் நாட்டிலும் அதிகளவில் பேசப்பட்டது. இறுதியில் அவருக்கு பொது மன்னிப்பு கிடைக்கவில்லை.
அரச தலைவர் ஏன் பொது மன்னிப்பை ரஞ்சனுக்கு வழங்கவில்லை என்பது எமக்கு தெரியாது. குற்றங்கள், பண மோசடிகள், ஊழல்கள் மற்றும் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் காரணமாக ரஞ்சன் சிறையில் அடைக்கப்படவில்லை.
வெளியிட்ட கருத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அநீதிக்கு எதிராக நியாயதிற்காக தொடர்ந்தும் போராடியவர் ரஞ்சன் ராமநாயக்க. ஏனையோருக்கு பொது மன்னிப்பை வழங்க முடியுமாக இருந்தால், ஏன் அவருக்கு வழங்கக் கூடாது.
அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டும் கடந்துள்ளது. இதனால், அரச தலைவர் அவருக்கு பொது மன்னிப்பை வழங்கி இருக்கலாம். அதற்கான அக்கறை அரச தலைவரிற்கு இல்லை என்பது எமக்கு தெரிகிறது.
ரஞ்சன் ராமநாயக்க அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்றார். ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காகவும் அவரது மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
