நாட்டின் ஐந்து மாவட்டங்களில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்:அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் காலநிலை மற்றும் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை இந்த நோய் பரவுவதற்கு வழிவகுக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவதானம்
குறிப்பாக, வயல்வெளிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சேற்று நிலங்களில் வேலை செய்வோர் பொருத்தமான பாதுகாப்பு காலணிகளை அணிவதுடன், நீண்ட காலமாகத் தேங்கிக் நிற்கும் நீர்நிலைகளில் அவதானத்துடன் செயற்படுமாறும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், காய்ச்சல், உடல் வலி அல்லது தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக முறையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |