நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கான "இளம் எழுத்துகள் 2026" வாசிப்பு - படைப்பாக்கப் போட்டி
வாசிப்பு மாதம் 2026ஐ முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கான வாசிப்பு – படைப்பாக்கப் போட்டியை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட சிறகுகள் அமையம் ஏற்பாடு செய்துள்ளது. "இளம் எழுத்துகள் 2026" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போட்டிக்குப் படைப்புகளை அனுப்புவதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 31ஆம் திகதியாகும்.
"வாசிப்பிலிருந்து படைப்பிற்கு…" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இப்போட்டி, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், கற்பனை, படைப்பாற்றல் மற்றும் ஆய்வுச் சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது. மாணவர்களின் படைப்புகளை அடையாளம் கண்டு பொதுவெளியில் அறிமுகப்படுத்துவதும், பாடசாலைகள், ஆசிரியர்கள், பெற்றோரின் பங்களிப்புடன் வாசிப்பு மற்றும் படைப்பாக்கச் சூழலை வலுப்படுத்துவதும் இதன் இலக்காகும்.
தரம் 1 முதல் தரம் 13 வரை கற்கும் அனைத்து மாணவர்களும் பாடசாலை ஊடாகவோ தனிப்பட்ட முறையிலோ இதில் பங்குபற்றலாம். ஒரு பாடசாலையிலிருந்து பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை.
போட்டி ஐந்து பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தரம் 1–2 மாணவர்கள் "எனது புத்தகம் – எனது வாசிப்பு உலகம்" என்ற கருப்பொருளில் ஓவியம் வரைய வேண்டும். தரம் 3–5 மாணவர்கள் 80 முதல் 100 சொற்களுக்குள் கதையும், தரம் 6–7 மாணவர்கள் 150 முதல் 300 சொற்களுக்குள் நன்னெறிக் கதையும் எழுத வேண்டும். தரம் 8–10 மாணவர்களுக்கு 350 முதல் 500 சொற்களில் விஞ்ஞானப் புனைவுக் கதையும், தரம் 11–13 மாணவர்களுக்கு "வாசிப்பு – மாணவர்களையும் சமூகத்தையும் வலுப்படுத்தும் சக்தி" என்ற தலைப்பில் 600 முதல் 800 சொற்களில் ஆய்வுக் கட்டுரையும் வழங்கப்பட்டுள்ளன.
படைப்புகள் மாணவரின் சொந்தப் படைப்பாகவும், ஏற்கனவே வெளியிடப்படாததாகவும், தமிழ் மொழியில் அமைந்ததாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தமது பிரிவில் ஒரு படைப்பை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
படைப்புகளுடன் மாணவரின் முழுப்பெயர், தரம், பாடசாலை, போட்டிப் பிரிவு, படைப்பின் தலைப்பு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொடர்பு இலக்கம், பொறுப்பாசிரியரின் பெயர் மற்றும் தொடர்பு இலக்கம் ஆகிய விபரங்களை இணைக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் அனுப்பும் மாணவர்களுக்குப் பொறுப்பாசிரியர் விபரங்கள் கட்டாயமல்ல.
படைப்புகளைத் தபால் மூலம் "இளம் எழுத்துகள் 2026", சிறகுகள் அமையம், இல. 21, சீனியர் ஒழுங்கை, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மேல் போட்டிப் பிரிவையும் குறிப்பிட வேண்டும். தபால் விநியோகத்திற்கான காலத்தைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே அனுப்புமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகுதியான படைப்பைச் சமர்ப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், சிறந்த படைப்புகளுக்கு விசேட அங்கீகாரமும் வழங்கப்படும். போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பாசிரியர்களின் பங்களிப்பும் பாராட்டப்படவுள்ளது. மேலும், தெரிவுசெய்யப்படும் சிறந்த படைப்புகள் தொகுக்கப்பட்டு சிறப்பு நூலாக வெளியிடப்படும்.
"உங்கள் படைப்பு ஒரு போட்டிக்காக மட்டும் அல்ல ஒரு புத்தகத்தின் பக்கமாக மாறலாம்" என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு 076 286 0975, 076 871 2817, 077 052 3495, 076 672 9289, 076 277 0566 ஆகிய இலக்கங்களுடன் அல்லது siraku.org இணையத்தளத்துடன் தொடர்பு கொள்ளலாம்.