இலங்கை அணிக்கு திரும்ப தயார் : முன்னாள் வீரர் அதிரடி அறிவிப்பு
இலங்கை அணிக்கு திரும்பத் தயார் என சகலதுறை வீரர் திசார பெரேரா அறிவித்துள்ளார். இவ்வாறு அணிக்கு திரும்பி ஓரிரு வருடங்கள் விளையாடத் தயாராக இருப்பதாகவும் அதற்கு புதிய தெரிவுக்குழுவை அதிகாரிகள் நியமிக்க வேண்டுமெனவும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், தற்போதைய தெரிவுக்குழுவை கடுமையாக சாடியுள்ளார்.இலங்கை அணியின் தற்போதைய வீழ்ச்சிக்கு தெரிவுக்குழுவே காரணமெனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புள்ளிவிபரங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள்
“2021 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தேர்வாளர்கள், புள்ளிவிபரங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள்,அவர்களது பதவிக்காலத்தில் இலங்கைக்காக அவ்வளவாகச் செயல்படாதவர்கள். மூத்த துடுப்பாட்ட வீரர்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாத மூன்று தேர்வாளர்களை கிரிக்கெட் சபை கொண்டுள்ளது,” என்றார்.
அத்துடன் சிரேஷ்ட வீரர்கள் ஓரம் கட்டப்படுவதற்கு அவர்களின் புரிதல் இன்மையே காரணமெனவும் அவர் சாடியுள்ளார். “தேர்வுக்கான சரியான புரிதல் இல்லாததே இங்குள்ள பிரச்சினை.
லங்கா பிரீமியர் லீக்கில் திறமையான வீரர்கள்
லங்கா பிரீமியர் லீக்கில் பல திறமையான வீரர்கள் இருந்தனர். எனினும், அவர்களில் எவரும் உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவர்களின் தேர்வு முறை எனக்கு புரியவில்லை,'' என்றார்.
உலகக் கோப்பை போட்டியின் போது திறமையான மற்றும் பொருத்தமான கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கு தேர்வாளர்கள் முன்னுரிமை அளிக்கவில்லை என்பது வெளிப்படையானது என்று அவர் கூறினார்.
தமக்கு விருப்பமான கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்யும் பாரபட்சமும் தேர்வாளர்களுக்குள் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.