பிரதமர் பதவியை ஏற்க நான் தயார்: ரணிலுக்கும் கோட்டாபயவுக்கும் அனுர விடுத்த சவால்!
பிரதமர் பதவியை ஏற்கத் தயார்
நாட்டை ஸ்திரப்படுத்தவும், தற்போதைய நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் வெளியே கொண்டு வர உதவவும் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடளுமன்ற உறுப்பினருமாகிய அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை குறுகிய காலத்தில் தீர்த்து வைப்பதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்களின் ஆணையுடன் புதிய அரசு
மக்கள் விடுதலை முன்னணி தனித்து செயற்பட விரும்பவில்லை எனவும் நாட்டு பிரஜைகளும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் இந்த நோக்கத்திற்காக ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
06 மாதங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள், பொருளாதார நெருக்கடிக்கான முதன்மைக் காரணங்களைச் சரிசெய்து நாட்டை ஸ்திரப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஸ்திரப்படுத்திய பின்னரே பொதுத் தேர்தலை நடத்தி, பொதுமக்களின் ஆணையுடன் புதிய அரசை நியமிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
சவாலை ஏற்றுக்கொள்ள தயார்
எவ்வாறாயினும், சவாலை ஏற்றுக்கொண்டு தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின் அரச தலைவரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
