மன்னாருக்கு காற்றாலை ஏன் பொருத்தமில்லை... அம்பலமான உண்மைகள்
மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையானது ஒவ்வொரு வருட இறுதியிலும் மீண்டும் ஒருமுறை எங்களை அகதிகளாக மாற்றியுள்ளதாக மன்னாரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தக் காற்றாலை திட்டத்தினால் மன்னாரில் வாழ்கின்ற மக்கள் கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். அதாவது காற்றாலையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று சொல்லிவிட்டு சாதாரணமாக கடந்து செல்கின்றனர்.
ஆனால் நான்கு மாதங்களாக மழைநீர் தேங்கி நிற்கும் போது கழிப்பறைகளை பாவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். அத்துடன் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றோம்.
ஏற்கனவே இருக்கின்ற 30 காற்றாலைகள் வந்த பிறகு கடந்த 4 வருடங்களாக நாங்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் மிக மோசமானது என்பதை உணர்ந்தோம். 30 காற்றாலைகளுக்கே மன்னார் தீவு இந்த நிலைக்கு உள்ளாகின்றது என்றால் மேலும் பல காற்றாலைகள் அமைக்கப்பட்டால் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.
அத்துடன் மன்னார் தீவிலுள்ள மக்கள் பனை வளத்தின் ஊடாக வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர். இந்த வெள்ளப்பெருக்கினால் பனங்கிழங்கு உற்பத்தி மற்றும் பனை மரத்தை நம்பிய தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் பல கிணறுகள் உவர் நீராக மாறுகின்றது.
மேலும் ஒரு காற்றாலைக்கு ஆறு அல்லது ஏழு ஏக்கர் நிலம் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. அதிகப்படியான காற்றாலைகள் இங்கு வருகின்ற போது தமிழ் பேசும் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படும். எதிர்காலத்தில் மன்னார் தீவு எதிர்கொள்ளப்போகும் சவால்களை தெரிந்துகொண்ட பின்னரே இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
