வடக்கு கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு பயன்படுத்தும் சட்டவிரோத பொருட்கள் மீட்பு
வடக்கில் அல்லைப்பிட்டி, ஊர்காவற்துறை, மணியந்தோட்டம், அரியாலை கடற்கரைப் பகுதிகளில் கடற்படையினரால் நேற்று மற்றும் நேற்று முன்தினம் (04,05) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கடற்றொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் சட்டவிரோத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சிறிலங்கா கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அல்லைப்பிட்டியின் குளப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டை மீட்கப்பட்டது.
குறித்த மூட்டையில் 30 நீர் ஜெல் குச்சிகள் மற்றும் 08 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
விசேட தேடுதல் நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து நேற்று(05) மணியந்தோட்டம் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் கடற்கரையில் இருந்த சாக்கு மூட்டை ஒன்று மீட்கப்பட்டது.
அதில் 35 நீர் ஜெல் குச்சிகள், 10 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 155 செ.மீ நீளமான பாதுகாப்பு உருகி ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு கடற்படைக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த சம்பவங்களைத் தொடர்ந்து, இது போன்று சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் இன்னும் நிகழலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படைக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.



நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்