கோவில் பூசாரி திருடிய அம்மன் சிலைகள் மீட்பு
பெறுமதியான சிலைகள், கையடக்கத் தொலைபேசிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல சொத்துக்களை திருடியதாகக் கூறப்படும் கோவில் ஒன்றின் பூசாரி ஒருவரை அலவத்துகொடகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அலவத்துகொட காவல் எல்லைக்குட்பட்ட அரம்பேபொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜாஜ் ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவத்துகுடா, அரம்பேபொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மோட்டார் சைக்கிள் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி இரவு திருடப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், கடந்த 21 ஆம் திகதி வத்தேகம பிடியேகெதர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், அப்பகுதியில் ஆலயம் ஒன்றை நடத்தி வருவதைக் கண்டறிந்து, அவரை ஆலய சடங்கு செய்வதாகக் கூறி அழைத்து வந்து கைது செய்தனர்.
பல்வேறு பொருட்கள் திருட்டு

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, இவர் இதற்கு முன்னர் பகமூன களுகங்கை வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் கையடக்கத் தொலைபேசியையும், மாத்தளை அலுவிஹாரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கைத்தொலைபேசியையும், லக்கல பிரதேசத்தில் உள்ள பத்தினி ஆலயத்தில் இருந்து பெறுமதியான இரண்டு பத்தினி தெய்வச் சிலைகளையும் திருடியதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் உள்ள புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் நீல மாணிக்கக்கல் ஒன்று போத்தலில் அடைக்கப்பட்டு சந்தேக நபரின் வீட்டு சுவரில் பூசப்பட்ட நிலையில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.