முல்லைத்தீவு - உடையார்கட்டில் மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் காணி ஒன்றில் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
குரவில் கிராமத்தில் தனியார் ஒருவர் காணியினை பண்படுத்தும் போது கடந்த 20.11.22 அன்று மனித எச்சங்கள் இனம்காணப்பட்டுள்ளன.
தோண்டும் நடவடிக்கை
இது குறித்து புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தினால் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொகான், தடையவியல் காவல்துறையினர், காவல்துறையினர் ஆகியோரால் தோண்டப்பட்டுள்ளது.
மனித எச்சங்களின் மாதிரிகள்
இதன்போது மூன்று வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். மனித எச்சங்களுடன் துப்பாக்கி இரவைகள் மற்றும் உடைகள், என்பன காணப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளின் சயனட், இலக்கத்தகடு என்பனவும் குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மனித எச்சங்களை மரபணு பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டவைத்திய அதிகாரியிடம் நீதிபதி பணித்துள்ளார்.