பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பாரிய குறைபாடுகள் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
நாட்டின் கல்வித்துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பு தெரிவு முறைகளில் பாரிய குறைப்பாடுகளும் வேடிக்கையான விடயங்களும் உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் கல்வி முறைமையிலும் ஆசிரியர் நியமனங்களிலும் பாரிய சீர்கேடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
46,000 ஆசிரியர் வெற்றிடங்கள்
பாடசாலைகளில் சுமார் 46,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் நிலையில், முதற்கட்டமாக 23,000 பேரை மட்டுமே நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காகக் கோரப்பட்ட 1,29,000 விண்ணப்பங்களிலிருந்து நேற்றைய தினம் முடிவுகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், விண்ணப்பதாரர்கள் பல பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ளதால், அவர்கள் பல்வேறு நேர்முகத் தேர்வுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

இதனால் எவ்வித சட்டச் சிக்கல்களும் இல்லாத 17,000 பேர் மட்டுமே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் முதற்கட்டமாக நியமனம் பெறவுள்ளனர். ஏனையோர் கட்டம் கட்டமாகவே சேர்க்கப்படவுள்ளனர்.
கல்வி அமைச்சின் முறையான திட்டமிடலின்மை காரணமாகவே மாகாண மற்றும் வலய மட்டங்களில் இத்தகைய குழப்ப நிலைமைகள் தோன்றியுள்ளன. இத்தகைய நெருக்கடி நிலைமைகளை வர்த்தமானி வெளியிட முன்னரே கவனத்திற் கொண்டிருக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்
இவற்றை விட அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று கடந்த மூன்று வருடங்களாக நியமனங்களின்றி வீடுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
பணம் கொடுத்துப் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக அரச சேவைக்கு உள்ளீர்க்கப்படும் அதேவேளை, அரச பல்கலைக்கழகங்களில் கல்விக் கற்று பட்டம் பெற்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இத்தகைய நடைமுறை இலவசக் கல்வி முறைமையின் முக்கியத்துவத்தினை சீரழிக்கின்றது.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருந்த வேளையிலே வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு செயற்பட்டால் கல்வித்துறை முன்னேற முடியாது.
நாட்டின் மனித வளங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துவரும் நிலையில், அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித முறையான தீர்வுகளுமின்றி தட்டிக்கழித்து வருவதானது கவலையளிக்கின்றது“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |