கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான விலைகளை குறைக்க நடவடிக்கை
எதிர்காலத்தில் தேவைப்படும் பட்சத்தில் மக்களுக்குத் தேவையான முட்டை மற்றும் கோழி இறைச்சியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளும் வகையில் விதிமுறைகள் இயற்றப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நேற்று (9) இடம்பெற்ற கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்கால நடவடிக்கை
மேலும் இது தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
“வர்த்தக அமைச்சினால் முட்டை இறக்குமதிக்கு உள்ள தடைகளை நீக்கி, அவற்றிற்கு தேவையான அனுமதிகளை வழங்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்தியதுடன் அதனை ஓரளவு கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
தேவைப்பட்டால், எதிர்காலத்தில் விதிமுறைகளை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நுகர்வோர் அதிகாரசபை மற்றும் வர்த்தக அமைச்சுடன் இணைந்து செயற்படுவோம் என நம்புகின்றோம்” என குறிப்பிட்டார்.
விலை அதிகரிப்புக்கான காரணம்
“மீன்களின் விலை அதிகரிப்பு காரணமாக கோழிப்பண்ணை வியாபாரிகள் முறையற்ற இலாபம் பெறும் நோக்கில் விலையை அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களை எதிர்காலத்தில் வர்த்தக அமைச்சுடன் இணைந்து கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.