முப்படைகளுக்கு குறைக்கப்படும் பதவிகள் மற்றும் செலவினங்கள்; இலங்கை அரசாங்கம்!
நாட்டின் பொருளாதாரத்தில் முப்படைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடானது பெரும் பங்கு வகிக்கிறது.
அந்தவகையில், முப்படைகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினுடனான இணக்கப்பாட்டிற்கு முன்னதாக முப்படைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பதவிகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
செலவினங்கள் மற்றும் பதவிகள் குறைப்பு
அந்தவகையில், முப்படையிலுள்ள பதவிகளை குறைத்தும், முப்படைகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு மனித பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேறு திறன்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் எச்சரிக்கை
இராணுவத்தில் இருந்து விலகிச் செயல்படுபவர்கள் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்திற்குள் உரிய அறிவிப்புக்களை மேற்கொள்ளாதுவிடின் இராணுவத்தில் இருந்து உத்தியோர்வபூர்வமாக நீக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்காக, பொதுமன்னிப்புக் காலம் இந்த வருடம் நவம்பர் 15 தொடக்கம் டிசம்பர் 31 வரை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பிற்காக விண்ணப்பித்தோர்
இதுவரை முப்படைகளிலிருந்து 16, 141 பேர் பொதுமன்னிப்பிற்காக விண்ணப்பித்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவப்பேச்சாளர் ரவி ஹேரத் அறிவித்துள்ளார்.
இதுபோல் விமான படைகளிலும் பொது மன்னிப்பிற்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் துஷாந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

