சுமந்திரன் அழைப்பு விடுத்த கடையடைப்பு - தமிழரசின் பிரித்தானிய கிளை கடும் எதிர்ப்பு
வடக்கு – கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை ஆதரவை வழங்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய (UK) கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முத்து ஐயன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தருக்கு நீதி கோரி கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கான அழைப்பு
இந்த கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு முறையான நடைமுறை ஒழுங்குகளை பின்பற்றாமல் விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளர் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
கட்சியின் உட்புற ஆலோசனைகளையும், ஏனைய கட்சிகள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பொது அமைப்புக்கள் சிவில் சமூக அமைப்புக்கள் எதனுடனும் கலந்துரையாடாமல் தடுக்கப்பட்ட இத்தீர்மானம் இலங்கைத் தமிழரசு கட்சிக்குள் நிலவுகின்ற தன்னிச்சையானதும், சர்வாதிகார போக்கையுமே காட்டுகின்றது.
மேலும், தங்களது தனிப்பட்ட அறிவிப்புக்கு ஆதரவைப் பெறும் நோக்கில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் ஊடகச் சந்திப்புகள் மற்றும் வர்த்தக சங்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கட்டாயப்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
சர்வாதிகார செயற்பாடுகள்
இது கட்சியின் கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அத்தோடு இன்றைய சூழலில் கதவடைப்பு போராட்டம் என்பது இலங்கை அரசுக்கு எந்தவித அழுத்தத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தாது.
வட கிழக்குக்குள் தமிழர்கள் மேற்கொள்ளும் களவடைப்பானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களையும், அன்றாடத் தினக்கூலி தொழிலாளர்களையும், வணிக நிறுவனங்களையும் பாதிப்பதாகவே அமையும்.
எனவே, இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை வன்மையாகக் கண்டிக்கிறது.
இனிமேல் இத்தகைய சர்வாதிகார செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்பதையும் எங்கள் கிளை வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

