வடக்கு ஆளுநரின் கண்டிப்பான உத்தரவு : தவறின் சட்ட நடவடிக்கை
வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு ஆளுநர் இதனை தெரிவித்தார்.
பதிவு செய்வது கட்டாயம்
கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் எனவும், வெளிமாவட்டங்களுக்கு கால் நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கும் போது உரிய சட்ட விதிகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கன்று பிறந்து 18 மாதங்களுக்குள் காது அடையாள வில்லைகளை (Ear Tag) பொருத்திக் கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளின் காது அடையாள வில்லைகள் (Ear Tag) பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும், உரிய நடைமுறைகளை பின்பற்றாத இறைச்சி வெட்டும் இடங்கள் மற்றும் விற்பனை செய்யும் இடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |