நிதியைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு நிவாரணம்: ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை
நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நிதியை ஒரு தடையாக கருத வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால பேரிடர் சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்காக, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி இன்று (28.11.2025) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, இன்று (28.11.2025) காலை Zoom வழியாக ஒரு விசேட மெய்நிகர் கலந்துரையாடலில் ஜனாதிபதி இணைந்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ஏற்கனவே 1.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவசரத் தேவைகளுக்காக 2025 வரவு செலவு திட்டத்தில் மேலதிகமாக 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

எனவே, எந்தவொரு நிதிக் கட்டுப்பாடுகளும் தங்கள் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலதிக நிதி உதவி தேவைப்பட்டால் மேலதிக நிதியைக் கோரவும், அவசர காலங்களில் மாவட்ட மற்றும் பிரதேசச் செயலாளர்களிடம் தற்போது கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக நிறுவப்பட்ட நிவாரண மையங்களின் நிர்வாகத்தை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |