எமது சிறுவர் ஆயுதமேந்தக் கூடாது! முன்னணியினரை கடுமையாக சாடும் துளசி (காணொளி)
எங்கள் சிறுவர்கள் ஆயுதமேந்தக்கூடாது என்றே நாங்கள் போராடினோம் தியாகங்களின் மீது ஏறி அமர்ந்து பகடையாடுவதில் இருந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி விலகியிருக்க வேண்டுமென ஜனநாயக போராளிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடகப்பேச்சாளருமான துளசி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த நவம்பர் 27 மாவீரர் தினத்தன்று யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் போன்று ஆடை அணிந்த சிறுவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன.
இது தொடர்பில் ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சைன்ற் குப்பிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுவர்களுக்கு விடுதலைப்புலிகளை ஒத்த ஆடை அணிவித்தமை அவர்களின் கழுத்திலே சையனைற் குப்பிகளை போன்று மாதிரிகளை கட்டியிருந்தமை அவர்களின் இடைப்பிலே பிஸ்ரலை கட்டியிருந்தமை ஒரு போராளியாக மனம் வருந்தி நாங்கள் பேசுகின்றோம், எங்களை மிகவும் நோகடித்த விடயமாக நாங்கள் கருதுகிறோம்.
எங்களது சிறுவர்கள் ஆயுதமேந்தக்கூடாது என்பதற்காகவே நாங்கள் சண்டை பிடித்தோம் நாங்கள் ஆயுதமேந்தினோம் எங்கள் சிறுவர்கள் கழுத்திலே குப்பிய போடக்கூடாது என்றுதான் நாங்கள் கழுத்தில் குப்பியை அணிந்தோம்.
அந்த சம்பவத்தினூடாக எங்கள் சமூகத்திற்கு என்ன கருத்தை சொல்ல வாறீங்கள் அந்த பிரதேசங்களில் மாவீரர் தின நினைவேந்தல்களை ஏற்பாடு செய்த முன்னணியினரின் பிள்ளைகளுக்கு குப்பி அணிவிக்கவில்லை அவர்கள் தங்கள் பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள்.
ஆகவே எங்களது இளையோர்கள் உசுப்பேத்துகின்ற அரசியல்வாதிகளிடமிருந்து விலகியிருக்கவேண்டும் அவர்கள் மீண்டும் உங்களை பலிக்கடாவாக்குவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.