யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை : அமைச்சர் அறிவிப்பு
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் எந்தவித தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
எனினும், விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கும், அந்த அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்காது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நினைவேந்தல் நடவடிக்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.'
2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, தடை செய்யப்பட்ட அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை, அவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானவை.

எனினும், யுத்தத்தில் உயிரிழந்த தமது தாய், தந்தை, பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களின் நினைவாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கும் எவருக்கும் தடையில்லை.
தமிழர் நினைவேந்தல் நடவடிக்கைகளைத் தடைசெய்வதே அரசாங்கத்தின் நோக்கம் அல்ல, சட்டத்திற்கு முரணான வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியாது.
திலீபன் நினைவேந்தல் விவகாரம்
சில அரசியல் தரப்பினர் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் – சிங்கள மக்களிடையே இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவருக்கும் ஒரே சட்டமே நடைமுறைப்படுத்தப்படும்.

வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு.
இதேவேளை, திலீபனின் நினைவேந்தல் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து விளக்கங்களைப் பெற்று மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |