தமிழ் இனப்படுகொலை ஊர்தி பவனியின் முன்றாம் நாள் ஆரம்பம்!
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மே18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.
இதன் ஒரு அங்கமாக தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்தி பவனியானது கடந்த 12 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 12 காலை தொடங்கிய இந்த ஊர்திப் பவனி வவுனியா சென்று மன்னார் சென்று -வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்தது.
இந்நிலையில் இன்று (14) காலை மல்லாவி நகரில் இருந்து 3 ம் நாள் பயணம் ஆரம்பிக்கப்பட்டது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு சென்று மீண்டும் கிளிநொச்சி மாவட்டம் ஊடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை மே 18 வந்தடையும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.