அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற நடவடிக்கை: வெள்ள நிலையை கருத்தில் கொண்டு நகர்வு
கொழும்பு (Colombo) உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து அனுமதியற்ற கட்டடங்களையும் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து, கருத்து தெரிவிக்கும் போதே அந்த அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்தா (W.S. Sathyananda) இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை குறைக்கும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்குக்கான பிரதான காரணம்
கொழும்பு உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிறிய நீர்வழிகள் மற்றும் வடிகால்கள் தடைபட்டமையே வெள்ளப்பெருக்குக்கான பிரதான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சரியான சட்ட அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவது தொடர்பான சுற்றறிக்கை இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுமென டபிள்யூ.எஸ்.சத்யானந்தா கூறியுள்ளார்.
அத்துடன், கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போதுள்ள ஈர நிலங்களை பாதுகாப்பதன் மூலம் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |