பூஸ்டர் தடுப்பூசியினால் பக்கவிளைவு ஏற்படுமா? உண்மை நிலவரம் என்ன?
கோவிட் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் என வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரயங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நாளொன்றிற்கு அண்ணளவாக மாரடைப்பினால் 450 பேரும் பக்கவாதத்தால் 100 முதல் 150 பேரும் உயிரிழக்கின்றனர். நாட்டில் கோவிட் தொற்று கண்டறியப்படுவதற்கு முன்னரே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
எனவே கோவிட் தடுப்பூசி மூலம் தான் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுகின்றது என்பது விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆகவே கோவிட்-19 தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளத் தடுப்பூசியினை உரிய வகையில் பெற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
