ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தரின் அடக்குமுறை சார் நடவடிக்கை - நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு
2019 ஆம் ஆண்டு முதல் ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றும் சுஜீவ அமரசேனவின் அடக்குமுறைசார் நடவடிக்கைகளின் கீழ் பல்கலைக்கழக சமூகம்(கல்வி, கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்)கடுமையாக பாதிப்புக்குட்பட்டுள்ளதாக அறியக்கிடைப்பதாகவும், உபவேந்தரின் அடக்குமுறை செயற்பாடுகள் தொடர்பாக 5 பகுதிகளின் கீழ் 86 ஆதாரங்களுடன் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு (FUTA) கல்வி அமைச்சரிடம் கையளித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளை நியமித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, இதன் தற்போதைய முன்னேற்றம் யாது என்று நாடாளுமன்றில் கல்வி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
விசாரணைகளின் முன்னேற்றம்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு (FUTA) செயலாளரும், ருஹுனு பல்கலைக்கழக விரிவுரையாளருமான ரொஹான் லக்சிறியின் படுகொலை முயற்சி சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாகமும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
பல்கலைக்கழகமொன்றுக்கு இருக்க வேண்டிய சுதந்திரமான, அமைதியான, ஜனநாயக ரீதியிலான கருத்து வெளிப்பாட்டுக்கான சந்தர்ப்பத்தை மறுத்து தன்னிச்சையான முறையில் அடக்குமுறைக் கலாசாரத்தை உருவாக்க உபவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தொடர்பாடல்களை மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
