தேசிய மக்கள் சக்தியினருக்கு வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் : எச்சரிக்கும் சஜித் தரப்பு
போராட்டக் காலத்தில் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க வந்தவர்கள் இன்று டை, கோட் அணிந்துக் கொண்டு நாடாளுமன்ற கௌரவம் மற்றும் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியை மக்கள் கண்டுக்கொள்ள போவதில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியினருக்கு வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (11) நடைபெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதிகள் வெளியேற்றம்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ”நேபாளம் நாட்டின் இன்றைய நிலையை பாருங்கள். ஜே.வி.பியினர் கூச்சலிடுவதை மக்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தியினருக்கு வீதியில் இறங்கிப் போக முடியாதவாறான நிலைமை உருவாகும் என்பதை மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
அரச செலவுகளை குறைத்துள்ளோம், அமைச்சுக்கான சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் இரண்டில் ஒன்றையே பெறுவோம் என்று குறிப்பிட்டீர்கள். சட்டமியற்றி முன்னாள் ஜனாதிபதிகளை அரச உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற்றியுள்ளீர்கள்.
இவ்வாறான செயற்பாடுகளினால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அமைச்சுக்கான சம்பளத்தையும் பெறுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தையும் பெறுகிறார்கள். இதுதான் உண்மை.
பிரதி அமைச்சர் ஒருவரின் சம்பள விபரத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்த போவதில்லை ஏனெனில் அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. நாங்கள் உங்களை போன்று குறுகிய மனநிலையில் வைராக்கியத்துடன் செயற்பட போவதில்லை” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
