நாட்டு மக்களுக்கு ரணில் வழங்கிய உறுதிமொழி
ஆசிய வலயத்தின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாதவாறு குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக எவருக்கேனும் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வழி ஏற்படுத்தும் எனவும் அதிபர் உறுதியளித்தார்.
ஐக்கிய இராச்சிய முறைமை
உலகின் அனைத்து நாடுகளும் இலத்திரனியல் ஊடக பாவனையின் போது இவ்வாறான செயன்முறைகளை பின்பற்றுவதாக சுட்டிக்காட்டிய அதிபர், இலங்கையில் அந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஐக்கிய இராச்சியத்திலுள்ள முறைமையை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹோமாகம பிரதேச செயலக அலுவலக வளாகத்தில் இன்று (15) இணைய முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்போருக்கு தமது கடவுச் சீட்டுக்களை இணைய முறைமை ஊடாக நாடளாவிய ரீதியிலுள்ள 25 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 50 பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக விண்ணபிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரச துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல்
அதேபோல் அனைத்து அரச துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்களை அறிமுகப்படுத்தி, பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து தகவல்களையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை உருவாகிக்கொடுப்பதாகவும் அதிபர் உறுதியளித்தார்.
