நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டம் - நீதிமன்றின் அதிரடி உத்தரவு!
சிறிலங்காவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் சட்டம் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் மூலம் பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அறிந்துகொள்ள முடியும் என்று சிறிலங்கா மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் அபேகோன் மற்றும் பி. குமாரரட்ணம் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தீர்மானம்

இதன் மூலம் ஊடகவியலாளர் ஒருவர் கோரிய, தமது சொத்துப் பிரகடனங்களை ஒப்படைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவேண்டும் என்ற தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, மற்றவர்கள் பின்பற்றுவதற்குரிய முன்மாதிரிகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சிறைத்தண்டனை

அத்துடன், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் விதிகளின் கீழ்வரும் எந்தவொருவரும், தேவையான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளுடன் தொடர்புடைய அறிவிப்பை வழங்கத் தவறினால், அபராதம் அல்லது விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனையுடன் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவராக கருதப்படுவார் அல்லது அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரண்டும் விதிக்கப்படும் என நீதியரசர் அபேகோன் தமது தீர்ப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கோரிய தகவல்களை தமக்கு வெளியிட வேண்டும் என்ற, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை எதிர்த்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தாக்கல் செய்த மனுவின் மீதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.