மன்னர் சார்லஸ்சின் முகம் கொண்ட முதல் நாணயத்தை வெளியிட்ட பிரித்தானிய அரசாங்கம்
பிரிட்டனில் ரிஷி சுனக் தலைமையிலான அரசாங்கம், மன்னர் மூன்றாம் சார்லஸின் முகம் கொண்ட முதல் நாணயத்தை வெளியிட்டு உள்ளது.
டிசம்பர் 8ஆம் திகதி முதல் பிரிட்டன் அஞ்சல் அலுவலகங்களில் தற்போது பிரிட்டன் மன்னராக இருக்கும் 3ஆம் சார்ல்ஸ் முகம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
முதல் கட்டமாகச் சார்லஸ் முகம் கொண்ட 50 பென்ஸ் நாணயங்கள் 96 லட்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பிரிட்டன் நாட்டில் சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின்பு எலிசபெத் முகம் கொண்ட நாணயங்களுக்குப் பதிலாகச் சார்லஸ் முகம் கொண்ட நாணயங்கள் வந்துள்ளது.
பிரிட்டனின் மாற்றங்கள்
பிரிட்டன் இளவரசி எலிசபெத் மறைந்த நிலையில் பல தசாப்தங்களுக்குப் பின்பு பிரிட்டன் நாட்டின் அரசராக மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.
இந்த நிலையில் பிரிட்டன் நாட்டில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் அந்நாட்டின் தேசிய கீதம் வரிகளைத் தொடர்ந்து, ரூபாய், நாணயங்கள், அரசு அறிக்கைகளில் குறிப்பிடப்படும் வசனங்கள் என மாற்றங்களைச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டன் மக்கள் மட்டும் அல்லாமல் பிரிட்டன் மன்னராக இருக்கும் சார்லஸ் உட்பட அதிகமானோர் எதிர்பார்த்துக் காத்திருந்தது சார்லஸ் முகம் கொண்ட நாணயங்களும், பணமும் தான்.
நாணய சேகரிப்பு
இன்று இங்கிலாந்தின் நாணய உற்பத்தியில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாவதாக கூறப்படுகின்றது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட நாணயம் புழக்கத்தில் வந்துள்ளது.
நாணய சேகரிப்பாளர்கள் தங்கள் சேகரிப்பில் சேர்க்க அல்லது முதல் முறையாக நாணய சேகரிப்பை தொடங்க இது ஒரு அருமையான வாய்ப்பு என்று ரோயல் மிண்ட் அணைப்பின் கலெக்டர் சேவை பிரிவின் இயக்குனர் ரெபேக்கா மோர்கன் கூறியுள்ளார்.
முதல் கட்டமாகச் சார்லஸ் முகம் கொண்ட 50 பென்ஸ் நாணயங்கள் 96 லட்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் காலப்போக்கில் தேவைக்கு ஏற்ப பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னரின் புகைப்படம்
சில மாதங்களுக்கு முன்பே பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி வெளியிட்ட அறிவிப்பில் மன்னர் 3ஆம் சார்லஸ் புகைப்படம் கொண்ட “பிரிட்டன் நாணய தாள்கள்” 2024 ஆம் ஆண்டு மத்தியில் புழக்கத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
விரைவில் “பிரிட்டன் நாணய தாளில்” இடம்பெறப்போகும் 3ஆம் சார்லஸ் மன்னரின் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், இந்தப் புகைப்படம் 5, 10, 20, 50 “பவுண்ட் தாள்களில்” இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1960 முதல் ராணி 2வது எலிசபெத்தின் முகம்கொண்ட அந்நாட்டு நாணயங்கள் புழக்கத்தில் காணப்படுகின்றன.
இதேபோல் தற்போது புழக்கத்தில் இருக்கும் எலிசபெத் முகம் கொண்ட தாள்கள் அனைத்தும் புழக்கத்தில் இருக்கும் என்றும் சார்லஸின் முகம் பதித்த தாள்களும் புழக்கத்திற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னர் 3ஆம் சார்லஸ் புகைப்படம் கொண்ட பிரிட்டன் நாணய தாள்கள் பழைய மற்றும் கிழிந்த தாள்களுக்கு மாறாக அளிக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வரும் என்றும் இங்கிலாந்து வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
