எரிபொருள் விலை அதிகரிப்பு - அரசுக்குள் வெடித்தது மோதல்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருள் விலையை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்குள் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரச தலைவரால் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பான கலந்துரையாடலின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு இடையில் பிளவு காணப்பட்டது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் அரச வங்கி முறை பாரியளவில் பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடையலாம் எனவும் மத்திய வங்கியின் ஆளுனர் தெரிவித்தார்.
ஆனால் எரிபொருள் விலையை அதிகரித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அரசாங்கம் மானியம் வழங்குவதை விட எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதே நடைமுறைச் செயற்பாடானது என நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரித்து அரசாங்கம் பெற்ற பணத்தை மானியங்களுக்கு மீள செலுத்த வேண்டுமாயின், அந்த அதிகரிப்பு வீண் செயலாகும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் அரச வங்கி முறைமை பாரிய சிக்கலில் உள்ளதாக கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானம் எடுக்காமல் விசேட அமைச்சரவை கூட்டத்தை நிறைவு செய்ய அரச தலைவர் தீர்மானித்திருந்தார்.
