ஏரிஎம் இல் பாரிய கொள்ளை - வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் காவல்துறை அதிகாரி உட்பட ஐவர் கைது
அரச வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களில் இடம்பெற்ற பாரிய பண மோசடி தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் மேகத்தன்ன காவல் நிலைய நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் கனடா மற்றும் பல்கேரிய பிரஜைகள் என தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி ரூபா கொள்ளை
காலி, ஹிக்கடுவ, பத்தேகம ஆகிய இடங்களில் அமைந்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம் இயந்திரங்களின் கணனி கட்டமைப்புக்குள் ஊடுருவி மென்பொருள் அமைப்பை மாற்றி, இவர்கள் சுமார் ஒரு கோடி ரூபாவை திருடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த காவல்துறை அதிகாரியின் கார், பணம் கொள்ளையிடப்பட்ட இடங்களுக்கு சென்றதாக தகவல் வெளியானதுடன், அவர் பிடிகல காவல் பிரிவுக்குட்பட்ட அமுகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலில் பிடிபட்ட இருவர்
சம்பவத்துடன் தொடர்புடைய கல்கிசை மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
