யாழ். நிதி கொடுப்பனவில் அரச அதிகாரிகள் மோசடி...! உதய கம்மன்பில பகிரங்கம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளன என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் தற்போதுள்ள 893 வீடுகளுக்குப் பதிலாக ஆயிரத்து 216 வீடுகளை சுத்தம் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் தனது பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
மேலும், டித்வா சூறாவளியின் தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள பல பிரதேச செயலர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312 குடும்பங்களைச் சேர்ந்த 51 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரு வீடுகள் முழுமையாகவும் 322 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் அரசாங்கம் சமீபத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சுத்தம் செய்வதற்காக 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
அரச அதிகாரிகள் மோசடி
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 36 கோடியே 14 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில் ஆயிரத்து 216 வீடுகளுக்கு நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 3 கோடியே 4 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர அறிக்கையின்படி நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 893 ஆகும்.
நிலைமை இவ்வாறிருக்க மாவட்ட செயலகத்தால் நெடுந்தீவில் 1,216 வீடுகளுக்கு எவ்வாறு நிவாரணம் கோர முடியும்? இதனூடாக அரச அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |