தாஜுதீன் படுகொலையில் உறுதியான முக்கிய சாட்சியம்! வெளியான அறிவிப்பு
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் கஜ்ஜாவும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட கஜ்ஜாவின் மனைவி சி.சி.டி.வி காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த குழுவில் இருப்பது தனது கணவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் நேற்று (30) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், 2012.05.17 ஆம் திகதியன்று அதிகாலை பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் என்பவர் நாரஹேன்பிட்டிய பார்க் வீதி சாலிக விளையாட்டு மைதானத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானார்.
அவரது மரணம் சந்தேகத்துக்கிடமானது என்பது முதலாவதாக அறிக்கையிடப்பட்டது. இதற்கமைய நாரஹேன்பிட்டிய காவல் நிலையம் மற்றும் பொரளை குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மரணம் விபத்தால் ஏற்பட்டது என்று குறிப்பிட்டு அந்த விசாரணைகளை நிறைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் காமினி மதுரட அப்போதைய காவல்துறைமா அதிபர் இளங்ககோனுக்கு இந்த விசாரணைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கையின் பிரகாரம் அப்போதைய காவல்துறைமா அதிபர் என்.கே.இளங்ககோன் தாஜூதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஒப்படைத்தார்.
இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. தாஜூதீன் மரணம் தொடர்பில் முதலாவது பிரேத பரிசோதனை முறையாக இடம்பெறவில்லை, சந்தேகம் காணப்படுவதாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதப் படுகொலை
இதற்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கல்சிசை நீதிமன்றத்துக்கு விடயங்களை அறிக்கையிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரேதம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் அஜித் தென்னக்கோன் தலைமையிலான மூவரடங்கிய குழுவினரால் இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தாஜூதீனின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு. இந்த மரணம் விபத்தால் இடம்பெற்றதல்ல, மனித கொலை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த மரணம் மனித படுகொலை என்ற அடிப்படையில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டனர்.
தாஜூதீனின் கார் பயணித்த வீதி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசேட கவனம் செலுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இந்த கார் பயணித்த வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காணொளி பதிவுகள் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன.
சி.சி.டி.வி காணொளிகளை பரிசீலனை செய்கையில் தாஜூதீன் ஒரு கடைக்கு முன்னாள் காரை நிறுத்தி விட்டு அந்த கடைக்குள் சென்று தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கி விட்டு மீண்டும் காரில் ஏறி செல்கிறார்.
அவரது காரை பின்தொடர்ந்து பிறிதொரு கார் செல்கிறது. அந்த காரில் இடைநடுவில் ஒருவர் ஏறுகிறார். அந்த நபர் யாரென்று அறிவதற்கு அந்த புகைப்படம் ஊடங்களுக்கு அக்காலப்பகுதியில் வெளியிடப்பட்டது. இருப்பினும் அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. இந்த நபர் தொடர்பில் தற்போது பல விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாதாள குழுவின் பிரதான உறுப்பினர்கள் கைது
இந்தோனேசியாவில் இருந்து அண்மையில் இலங்கையின் பாதாள குழுவின் பிரதான உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள். இவர்களில் பெக்கோ சமன் என்பவர் உள்ளார்.
இந்த பெக்கோ சமன், அருண சாந்த என்ற பெயருடைய கஜ்ஜா என்பரின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளார். இந்த கஜ்ஜா என்பவரின் மனைவி சுய அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளித்துள்ளார்.
கஜ்ஜா என்பவருக்கு பல தரப்பில் இருந்து உயிரச்சுறுத்தல் இருந்ததாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட கஜ்ஜா 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பங்குபற்றி தாஜூதீன் படுகொலை பற்றி ஒருசில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கஜ்ஜாவின் மனைவியிடம் வினவிய போது கஜ்ஜா அந்த நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்களையே தான் அறிந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தாஜூதீன் காரை பின்தொடர்ந்து சென்ற காரின் காணொளியை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கஜ்ஜாவின் மனைவியிடம் காண்பித்துள்ளார்கள். அந்த காரில் இருந்தது தனது கணவர் என்று கஜ்ஜாவின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபரின் உடல் இலட்சனங்களை அடிப்படையாகக் கொண்டு அது தனது கணவன் கஜ்ஜா என்று அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட தாஜூதீன் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் 13 ஆண்டுகாலமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சாட்சியங்களை அடிப்படையாக கொண்டே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
