அரசாங்கம் மீது ஆளும் தரப்பு எம்.பி கடும் விமர்சனம் -நெருக்கடி நிலையை மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் உண்மை நிலையை மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டுமென ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கோரிக்கை விடுத்துள்ளார்.
காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது சமூக கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். சமூக கட்டமைப்பில் பல பிரச்சினைகள் தற்போது தோற்றம் பெற்றுள்ளன. அரசியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவது மக்கள் பிரதிநிதிகளின் பிரதான பொறுப்பாகும்.
மக்கள் மத்தியில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடனும்,உண்மைத்தன்மையுடனும் செயற்படுகிறதா என்பது கேள்விக்குரியதாக உள்ளது. நெருக்கடி நிலைமையினை நாட்டு மக்களிடமிருந்து மறைக்க அரசாங்கம் மக்களை திசைதிருப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுவது பல்வேறு சம்பவங்கள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
தேசிய மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொறுப்பான அமைச்சு உரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதை அவதானிக்க முடியவில்லை. மின்விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சாரசபை தெரிவிக்கிறது.
ஆனால் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிடுகிறது. எத்தரப்பினரது கருத்தை ஏற்பது என்ற சிக்கல் நிலைமை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என அவர் தனது விசனத்தை வெளியிட்டுள்ளார்.
