உக்ரைன் மீது ரஷ்யாவின் இடைவிடாத கோரத் தாக்குதல்கள்! பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் மக்கள்
தொடர்ச்சியாக நான்காவது நாளான இன்றும் உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ புகையிரத நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அவர்கள் அண்டை நாடுகளின் எல்லையை நோக்கி செல்கிறார்கள். அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது.
இதுவரை உக்ரைனில் இருந்து 1.20 லட்சம் பேர் அகதிகளாக போலந்து, ருமேனியா, அங்கேரி, மால்டோவா, சுலோவாகியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
சண்டை மேலும் வலுவடைந்தால் 40 லட்சம் பேர் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘நாங்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டோம். எங்கள் நாட்டை காப்போம். நான் தொடர்ந்து இங்குதான் இருப்பேன். நாட்டை விட்டு வெளியேற மாட்டேன்’’என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, ‘‘தலைநகரை உக்ரைன் இராணுவத்தினர் காக்க போரிட்டு வருகிறார்கள். தலைநகர் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இன்னமும் இருக்கிறது. எதிரிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன’’ எனவும் தெரிவித்தார்.
ரஷ்ய படையின் அதிரடி தாக்குதலால் தலைநகர் கீவ் விரைவில் வீழும் என்று கருதப்பட்ட நிலையில் உக்ரைன் இராணுவ வீரர்கள் கடுமையாக எதிர்த்து போரிட்டனர். இதனால் ரஷ்ய படை கடும் சவாலை சந்தித்தது.
நேற்று 3-வது நாளில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்தது. அதேவேளையில் தலை நகர் கீவ் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. கீவ் நகரை பிடிக்க ரஷ்ய படையினர் தீவிரமாக உள்ளனர். இந்தநிலையில் உக்ரைன் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷ்ய இராணுவத்தினருக்கு அதிபர் புடின் திடீரென்று நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ரஷிய இராணுவ தரப்பில் கூறும் போது, ‘‘உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் அழைப்பு விடுத்தோம். உயர்மட்ட கமிட்டிகளை அனுப்பவும் தயாராக இருந்தோம். ஆனால் உக்ரைன் அதை ஏற்கவில்லை. இனி பேச்சு வார்த்தை நடத்தப்பட மாட்டாது. உக்ரைனை அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கப் போகிறோம்’’என்று தெரிவித்தது.
இதேபோல் உக்ரைன் வடகிழக்கு நகரமான கார்கீவில் உள்ள எரிவாயு குழாய் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறும்போது, ‘‘ரஷ்ய இராணுவத்தினருக்கு அதிபர் புடின் திடீரென்று நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.ய படைகள் உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கீவில் எரிவாயு குழாயை வெடிக்க செய்துள்ளனர்.
கடுமையான புகை மூட்டம் வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக் கூடும். இதனால் மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்களை ஈரமான துணியால் மூடிவைக்க வேண்டும். நிறைய திரவங்களை குடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவம் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் மட்டுமே கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. மற்ற பகுதிகளில் பெரிய தாக்குதல்களை நடத்தாமல் விமானங்களின் மூலம் குண்டுகளை வீசியது. தற்போது அனைத்து முனைகளில் இருந்தும் தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதால் இன்று முதல் உக்ரைனில் நடக்கும் போர் உச்சக் கட்டத்திற்கு செல்லும் என்ற பீதி நிலவி வருகிறது.
