உக்ரைன் அதிபர் மாளிகையை ஏலமிடவுள்ள ரஷ்யா: போருக்கான திட்டம்!
உக்ரைன் அதிபருக்கு சொந்தமான மாளிகையை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் அதனை போருக்கு பணம் திரட்டுவதற்காக ஏலம் விட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கிரிமியா நகர தலைவர் இதுதொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டார்.
அதில், "உக்ரேனிய வணிகர்கள் மற்றும் பொது நபர்களுக்குச் சொந்தமான 57 சொத்துக்களை தேசியமயமாக்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது." என கூறியுள்ளார்.
கிரெம்ளின் மாளிகை தாக்குதல்
இதனையடுத்து அங்குள்ள முக்கிய குடியிருப்பு கட்டிடங்கள் ஏலம் விடப்படும் என்றும், உக்ரைனில் நடக்கும் ரஷ்யாவின் போருக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என கிரிமியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் விளாடிமிர் கான்ஸ்டான்டினோவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஷ்யா- உக்ரைன் இடையே ஒராண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினை கொலை செய்ய உக்ரைன் முயற்சி மேற்கொண்டதாகவும், அதிபரின் கிரெம்ளின் மாளிகையை தாக்குவதற்காக அனுப்பப்பட்ட 2 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
ஆனால் ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. கிரெம்ளின் மாளிகை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கும், உக்ரைனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், கிரெம்ளின் மாளிகையை தாக்குவதன் மூலம் இராணுவ பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது’’ என உக்ரைன் அதிபரின் செய்தி தொடர்பாளர் மிகாய்லோ போடோல்யாக் கூறியுள்ளார்.
இந்நிலையில், மஸ்கோவில் அங்கீகாரம் அற்ற ட்ரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக மஸ்கோ நகர முதல்வர் செர்கே சோபியானின் தெரிவித்துள்ளார்.