தன்னை எதிர்ப்பவர்களை திட்டமிட்டு முடக்கும் புடின் : பெண் ஊடகவியலாளரின் வேட்பு மனு நிராகரிப்பு
ரஷ்ய - உக்ரைன் இடையிலான போர் தற்போது வளர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புக்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்னை எதிர்ப்பவர்களை திட்டமிட்டு முடக்கும் புடினின் செயல்களுக்கு தேர்தல் ஆணையமும் துணை போவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போருக்கு பிறகு ரஷ்யாவில் நடைபெறும் முதல் தேர்தலாக அடுத்த வருடம் மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்பு மனு தாக்கல்
இதன்படி, போருக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் "யெகேத்ரினா டன்ட்ஸோவா" (Yekaterina Duntsova) எனும் பெண் சுயேட்சை அரசியல்வாதியும் ஒருவர். இவர் முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் புடினுக்கு எதிராக போட்டியிட யெகேத்ரினா வேட்பு மனு தாக்கல் செய்திருப்பினும், ரஷ்ய தேர்தல் ஆணையம் அவரது மனுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக காரணம் காட்டி மனுவை நிராகரித்தது.
அந்நாட்டு தேர்தல் சட்டப்படி, ஆதரவாளர்களின் கையெழுத்தை பெற வேண்டிய அடுத்த கட்டத்திற்கு யெகேத்ரினா செல்வதை தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மூலம் முடக்கியுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து ரஷ்ய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் போர்
அத்துடன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன், ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.
இதன்காரணமாக, இரு தரப்பிலும் பலத்த கட்டிட சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டாலும், போர் 635 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |