ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யாவுக்கு பாரிய தோல்வி
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக் குழுவை அமைக்கவுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் உக்ரைனிய தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையம் பெருமளவில் ஆதரித்துள்ளது.
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ரஷ்யா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் ரஷ்யா மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.13 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.17 நாடுகள் விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றபட்டது .
சீனா, கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகள் வழக்கமாக ரஷ்யாவை ஆதரிக்கும். ஆனால், இம்முறை அவை வாக்களிப்பதிலிருந்து விலகி இருந்தன.
ஆனால், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் முன்வைத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சில நாடுகள், தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வார்த்தைகள் ஒருதலைபட்சமாக இருப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தின.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் அத்துமீறல்கள் காரணமாக மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது" என தெரிவித்துள்ளது.
