உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா திட்டமிட்டுத் தாக்குதல்: ஐ.நா. குற்றச்சாட்டு
உக்ரைனில் மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய எரிசக்திக் கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு போர் ஆரம்பமானதிலிருந்து உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், கடந்த குளிர்காலத்தில் இத்தாக்குதல்கள் தீவிரமடைந்ததால் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் வசதிகள் இன்றி கடும் குளிரில் பாதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெப்பநிலை மைனஸ் 30 பாகை செல்சியஸ் வரை குறைந்த நிலையில், வெப்பமூட்டும் வசதிகள் இல்லாததால் உடல் உறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகியதாகவும், குளிரால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான தரவுகள்
உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் அன்றீ சிபிஹா, பொதுமக்களின் எரிசக்திக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விசாரணைக் குழுவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ரஷ்யா, அறிக்கை பொய்யான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |