தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்: முதல் முறையாக ஐசிபிஎம் ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் (Ukraine) மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா (Russia) ஏவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 60 ஆண்டுகளில் போர் முனையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது இதுவே முதல் தடவையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து தற்போது 1000 நாட்களையும் கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன.
நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி இருந்தது.
உக்ரைன் -ரஷ்யா
எனினும், இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கினார்.
நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு ஆர்வம் காட்டிய உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஆயிரம் நாட்களை கடந்து நீடித்து வருகிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது போர் பதற்றமானது அதிகரித்துள்ளது.
இதற்கு நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா அனுமதி வழங்கியதே காரணம் எனலாம். அமெரிக்கா அனுமதி கொடுத்ததும், ரஷ்ய ஜனாதிபதி புடின், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி கொடுத்தார்.
இதற்கிடையே, நீண்டதூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை பிரியான்ஸ்க் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கை தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சக்தி வாய்ந்த ஏவுகணை
உக்ரைனின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடியை ரஷ்யா கொடுக்கும் என சொல்லப்பட்ட நிலையில், இன்று ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஐசிபிஎம் எனப்படும் கண்டம் intercontinental ballistic missile என்பது 5,800 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது ஆகும். RS-26 Rubezh என்ற ஏவுகணை உக்ரைனின் டினிப்ரோ நகரத்தில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களையும் சுமந்து சென்ற இந்த ஏவுகணையால் தாக்குதல் நடத்த முடியும். ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு முதல் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட பல்வேறு வகையான ஐசிபிஎம் ஏவுகணைகள் உள்ளன.
இந்த நவீன ஏவுகணையை நகர்த்தக்கூடிய (மொபைல்) ஏவுதளத்தில் இருந்து கூட ஏவ முடியும். திரவ எரிபொருள் அல்லது திட எரிபொருளை பயன்படுத்த முடியும்.
திரவ எரிபொருளால் செல்லும் ஐசிபிஎம் ஏவுகணையை விட திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணை மிகவும் ஆபத்தானது. ஐசிபிஎம் ராக்கெட் முதல் முறையாக 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியனால், அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 1959 ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |