அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி- விண்வெளி நிலைய தொடர்பு துண்டிப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ்வில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதில், பல கட்டடங்கள் உருக்குலைந்தன.
ரஷ்யாவின் இந்த செயலால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இதனிடையே உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதாக நேற்று (மார்ச் 2) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவுக்கான ரொக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி நிலையம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
