முதல்நாள் போர் வெற்றி -ரஷ்யா அறிவிப்பு
உக்ரைன் மீதான முதல்நாள் போர் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இன்றைய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள இராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவ கிடங்குகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.
பல நகரங்களில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 இராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ராடர் நிலையங்கள் அடங்கும்.
மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள இராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை. நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
உக்ரைன் இராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். கீவ் நகர் அருகே 14 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்தில் சிக்கியது.
நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 68 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உக்ரைன் மீதான முதல்நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் படையெடுப்பின் முதல் நாள், 11 விமான நிலையங்கள் உட்பட 74 இராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டதாக அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு "முதல்நாள் போர் வெற்றிகரமானது " என்று தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவம் தொடக்கத்தில் இருந்து இதுவரை 203 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
