உடன் நாடு திரும்புங்கள் -அமெரிக்கர்களுக்கு அதிபர் பைடன் அவசர அறிவிப்பு
போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பும்படி அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், 'நாங்கள் ஒன்றும் தீவிரவாத குழுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. உலகில் மிகப்பெரிய இராணுவத்தை கொண்டுள்ள நாடான ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மற்ற நடவடிக்கைகளைப் போன்று இதனை நாம் பார்க்க முடியாது.
இதன் அடிப்படையில் அமெரிக்கர்களை சொந்த நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா படைகளை அனுப்பாது. இதில் போர் ஏற்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
ரஷ்யா படைகளை குவித்து வருவதால் யாரும் உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அங்கிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்.' என்றார்.
பதற்றம் அதிகமானதைத் தொடர்ந்து கடந்த மாதம் 23-ம் திகதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையே, உக்ரைனின் அயல் நாடான போலந்திற்கு அமெரிக்கா 1700 பேர் கொண்ட படையை அனுப்பி வைத்துள்ளது. தொடர்ந்து 1000 பேர் கொண்ட படை ருமேனியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், நேட்டோ அமைப்புக்காக 8,500 பேர் கொண்ட இன்னொரு படை தயார் நிலையில் உள்ளதென்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
