ரஷ்யாவுக்கு தலையிடியாக மாறிய உலகத் தலைவர்களின் முடிவு
ரஷ்யாவின் படை நடவடிக்கை முடிவுக்கு வரும் வரை உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்குவதாக ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உறுதி வழங்கியுள்ளனர்.
ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி உரையாற்றியதை தொடர்ந்து ஜி 7 நாடுகளின் தலைவர்கள் கூட்டு அறிக்கையொன்றின் மூலம் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளனர்.
உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவு
உக்ரைனுடன் இறுதி வரை ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் நிதி, மனிதாபிமான, இராணுவ மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்புக்களை வழங்குவோம் எனவும் ஜி 7 நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக எழுந்துள்ள சர்வதேச தாக்கங்கள் குறித்து குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதன் ஊடாக உலகளாவிய பொறுப்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்த உறுதியுடன் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜி 7 நாடுகளின் தலைவர்களது சந்திப்பின் ஊடாக மேலதிக விடயங்களை உக்ரைனுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் விவசாய மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிபந்தனையின்றி நிறுத்த வேண்டும் என ரஷ்யாவை வலியுறுத்திய ஜி 7 நாடுகளின் தலைவர்கள், கருங்கடலில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் ஊடாக விவசாயப் பொருட்களை ஏற்றிய கப்பல்கள் தடையின்றி பயணிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஷ்யாவின் திட்டம் குறித்தும் ஜி 7 நாடுகளின தலைவர்கள் தீவிரமான கரிசனை
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய ஏவுகணைகளை அடுத்த மாதம் பெலரஸ்சிற்கு வழங்கும் ரஷ்யாவின் திட்டம் குறித்தும் ஜி 7 நாடுகளின தலைவர்கள் தமது தீவிரமான கரிசனையை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைனுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விடயத்தில் ஜி 7 நாடுகள் ஒன்றுபட்டு நிற்பதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் கூறியுள்ள போதிலும் உக்ரைன் - ரஷ்ய மோதல்கள் மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜி 7 நாடுகளின் மாநாட்டில் தாம் ஆற்றிய உரையின் போதான நிழற்படத்தை பகிர்ந்துள்ள உக்ரைன் அதிபர், தமது நாட்டிற்கு ஆதரவு வழங்கிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை தொடர்ந்தும் பலப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள உக்ரைன் அதிபர், ஏற்றுமதி செய்யும் எரிபொருள் மூலம் ரஷ்யாவிற்கு கிடைக்கும் வருமானத்தை குறைக்கும் முயற்சிகளுக்கும் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
