ரஷ்யா - உக்ரைன் போர் சூழல்!! இலங்கைக்கும் பாதிப்பு
ரஷ்யா - உக்ரைன் நெருக்கடி காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 115 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கலாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய முன்னாள் பிரதமர், உக்ரைன் மற்றும் உள்ளூர் எரிசக்தி நெருக்கடிகள் குறித்து நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள எண்ணெய் பங்குகளுக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ரஷ்யாவிடமிருந்து திரவ இயற்கை எரிவாயு கொள்வனவை ஐரோப்பா நிராகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், கட்டாரில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அவை அனுப்பப்படும்.
இந்த வளர்ச்சியானது திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் எதிர்காலத்தில் திரவ இயற்கை எரிவாயு விலையும் அதிகரிக்கும்.
எனவே அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து கொள்வனவிற்கும் பணம் வழங்கி, எதிர்காலத்தில் கூடுதல் கட்டணங்களை செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்தின் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் ஊக்குவிப்புப் பொதியை அறிவித்துள்ளதால், நிதியமைச்சர் அதற்கு எவ்வாறு நிதியளிப்பது என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட வேண்டும்” என்றார்.
